Saturday 15 November 2014

இந்து வேதங்கள் காட்டும் கடவுள்

சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் 1-ல்:

அருள் வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், விதிகளாவதால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக் கூடியவர். மாறக் கூடிய பொருள் கூட்டுப்பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மறுதலை அடைந்தே தீர வேண்டும். எனவே கடவுள் இறந்துவிடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும் படைப்பவனும், ஆரம்பமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணை கோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால், ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல உலகங்கள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்துவிடுகின்றன. இதையே பிராமணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்'. இது தற்கால விஞ்ஞானத்திற்குப் பொருந்தியதாக உள்ளது.

Monday 8 September 2014

வாழிய செந்தமிழ்!




இது திருநெல்வேலியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் பள்ளி. இதன் சுற்றுச்சுவரில் "ENGLISH ZONE" என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தப் பள்ளி வளாகம் தமிழ் உட்பட ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் தடை செய்யப்பட்ட பகுதி என்பதாகும். இந்தப் பள்ளி ஒரு உதாரணம் மட்டும்தான். இதைப் போன்ற இன்டர்நேஷனல், CBSE மற்றும் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் தமிழகம் முழுக்க இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் ஹிந்தியை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தியை விரட்டுவதன் மூலமும், தமிழைப் பள்ளிகளில் தடை செய்வதன் மூலமும்தான் தமிழை வளர்க்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களோ என்னவோ!

தமிழ்க் குழந்தைகளை மாணவர்களாகக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் பள்ளியில், தமிழ் தடை செய்யப்பட்ட மொழி என்பது எத்தனை பெரிய அவமானம். இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் பல பெற்றோர்.

சாதாரண மக்கள் இதைப் பெருமையாகக் கருதுவதைப் பற்றி நாம் கவலைப்பட இடமில்லை. தமிழின் பெயரால் அரசியலும், பிழைப்பும் நடத்தும் பெரும்பான்மையான வாய்ப்பேச்சு வீரர்களின் குழந்தைகளும் கூட இத்தகைய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்பதுவே கசப்பான உண்மை.

இத்தகைய வேஷதாரிகளின் பேச்சையும், தமிழைத் தடை செய்யும் பள்ளிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். "ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளியாக முடியும்" என்ற அடிமைப் புத்தியும் நம்மிடமிருந்து விலக வேண்டும்.

தமிழும், தமிழனும் வளர வேண்டுமானால், அதற்கு வழி தமிழைக் கற்பதுதானே தவிர, பிற மொழிகளை விரட்டுவது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எந்த மொழியைப் படித்தாலும், படிக்காவிட்டாலும் தமிழைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு!

Sunday 7 September 2014

தமிழ் படிப்போம்!

நேற்று மாலை (06-09-2014) மதுரைப் புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தனின் சிறப்புரை.

"தமிழில் இல்லாதது எதுவும் இல்லை. என்ன கேள்வி என்றாலும் திருக்குறளில் பதில் இருக்கிறது. ஆனால் இன்று வெளிநாட்டு அறிஞர் சொன்னால்தான் நம்மவர்களுக்கு எதுவும் பிடிக்கிறது" என்று தமது உரையில் குறிப்பிட்டார். நமது கல்வி முறையும், இன்றைய நமது கல்விச்சாலைகளும் இத்தகைய சமுதாயத்தைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

அரங்கம் முழுவதும் நல்ல கூட்டம். இத்தகைய கூட்டத்தைக் கூட்டும் - அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் வல்லமையுடைய பேச்சாளர்களும் அறிஞர்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று எப்போதும் நான் எதிர்பார்ப்பேன். நேற்று அப்பணியை பேராசிரியர் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்தார்.

"நிகண்டு படிக்காமல் தமிழ் படிப்பு நிறைவடையாது" என்றும் ஒரு கூற்றை முன்வைத்தார் பேராசிரியர். வாரியார் சுவாமிகள் தமது "கம்பன் கவிநயம்" என்னும் நூலில் ஓரிடத்தில் "சொல்லுதல்" என்னும் சொல்லுக்கு நிகரான சொற்கள் அனைத்தையும் அவற்றின் பொருளுடன் பட்டியலிட்டுக் காட்டியிருப்பார். புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படாத உணர்வும் புரிதலும் பேராசிரியர் பேச்சின்போது ஏற்பட்டது. மொழியைச் சரியாகவும் திறம்படவும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கான அரிச்சவடி இது. தமிழ் மொழியின் வளத்தை வாரியார் சுவாமிகளின் புத்தகம் நமக்கு காட்டியதென்றால், "நீ வாசலைத்தான் பார்த்திருக்கிறாய்; மாளிகையின் உள்ளே வா" என்று அழைக்கிறது பேராசிரியரின் பேச்சு.

"தமிழில் பக்தி இலக்கியம் பக்தியை மட்டும் சொல்வதில்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் கலந்துதான் பக்தி இலக்கியம் படைக்கப்படுகிறது" என்று ஆண்டாள் பாசுரங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் பாடலில் ஒரு உதாரணம் மட்டும்தான் நேற்று கூறினார். நான் "எப்போ வருவாரோ" தொடர் சொற்பொழிவில் ஆண்டாள் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவை நினைவுகூர்ந்தேன். அந்த உதாரணம் நிச்சயம் கூட்டத்தில் கணிசமானவர்களை அவரவர் கொண்டிருந்த ஆண்டாள் பாசுர அனுபவத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் விட, பேராசிரியரின் பேச்சின் வழியாக எனக்குக் கிடைத்த உன்னதமான விஷயம்: அறிவியல், கணிதம் முதலியவற்றைப் போலவே - சொல்லப்போனால் அவற்றை விட ஒருபடி அதிகமாக - ஆச்சர்யங்களையும், ஆனந்தத்தையும் தமிழ் படிக்கும்தோறும் - கேட்கும்தோறும் அள்ளித்தரும் என்பதுதான். 

Thursday 24 July 2014

தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே...

நேற்று இரவு, ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசலசாமி கோவிலில் முனைவர் கு. ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம். பொருள் "ஆன்மிகம் தழைக்க பெரிதும் தேவை - பக்தி நெறியே / தொண்டு நெறியே" என்பது. குடும்பத்துடன் சென்றிருந்தேன். அது குறித்த சில வார்த்தைகள்...

முதலில் கூற வேண்டிய விஷயம், போன நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதுதான். நிறைய புதிய விஷயங்களையும், நல்ல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.

வாளால் மகவரிந்து ஊட்டிய சைவரின் கதை நான் அறிந்தது. அதே போன்ற வைணவர் கதையைக் கூறி, பக்தன் யார் என்பதையும், பக்தி எது என்பதையும் அடையாளம் காட்டினார்கள். "பலனை எனக்களித்துவிட்டு பணி செய்" என்று அர்ஜுனனை குருக்ஷேத்திர யுத்தத்தில் ஏவுகிறார் கிருஷ்ண பரமாத்மா. நீண்ட மனப் போராட்டங்களுக்குப் பிறகு, அர்ஜுனன் சர்வபரித்தியாகம் செய்து "கிருஷ்ணா! எனக்கு நன்மையானது எதுவென்று சொல்; அதையே செய்கிறேன்" என்று பரமாத்மாவைச் சரணடைகிறான். எளிதில் புரிந்துகொள்ள முடியாத இந்தச் சரணாகதித் தத்துவ விளக்கத்தை, சிறு கதையின் மூலம் விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அதே போல, ஒரு துறவிக்காக  நரசிம்ம மூர்த்தியைப் பிடித்து வந்த வேடனின் கதையைச் சொல்லி, தொண்டனை அடையாளம் காட்டியதும் கூட அபாரமானது. ஏழைக்களித்த வாழைப்பழம் எம்பெருமானை அடைந்த கதையும் கூட, தொண்டனை அடையாளம் காட்டுவதுதான். இறைவனுக்கு செய்யும் தொண்டை விட, மக்களுக்கு செய்யும் தொண்டு இறைவனை நேரடியாக அடைவதைப் படம் பிடித்துக் காட்டும் கதைகள் இவ்விரண்டும்.

பக்தர்கள் அணியில் திரு. சங்கர் ராம் அவர்களும், தொண்டர்கள் அணியில் திருமதி. இந்திரா அவர்களும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். குறிப்பாக, இந்திரா அவர்களின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது. மேலே கூறியவற்றில் வேடன் நரசிம்ம மூர்த்தியைப் பிடித்த கதை அவர் கூறியதுதான்.

தொண்டர்கள் அணியில், திரு. செல்லக்கண்ணனின் பேச்சில் குறைகள் இல்லையென்றாலும், அவருடைய பேச்சு அணிக்கு வலு சேர்க்கவில்லை. சொல்ல விழைந்த விஷயத்தை நெற்றியில் அடித்தாற்போல் அவர் சொல்லவில்லை. முருகப் பெருமானிடம் பெரியது எதுவென்று கூறும் ஔவை, "தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே" என்று கூறுகின்றார். அதைச் சொல்ல முற்பட்ட பேச்சாளர் பாடலை மறந்தது மட்டுமல்லாமல், அதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கவும் தவறிவிட்டார்.

ஔவை "பக்தர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே" என்று கூட சொல்லியிருக்கலாம். பக்தர் என்ற வார்த்தையும், தொண்டர் என்ற வார்த்தையும் ஒரே ஒலியளவை (தேமா) உடையனவே. இரண்டில் எதைப் பயன்படுத்தியிருந்தாலும் பாட்டுக்குப் பங்கம் இல்லை. "அனைத்துத் தமிழர்களுக்கும் ஞானப் பால் ஊட்டும் அன்னையாகிய ஔவையை விடவா இன்னொரு நடுவர் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்க வேண்டும்?" என்று அவர் கேட்டிருந்தால், அதற்குப் பிறகு, அவை தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதிருந்திருக்காது. விஷயத்தைத் தொட்ட அவர், விளக்கமாக சொல்லத் தவறிவிட்டார்.

திருமதி. மலர்விழி அவர்களின் பேச்சு திருப்திகரமாக இல்லை. சென்ற வருடம் நெல்லை புத்தகக் கண்காட்சியில் தொடங்கி, நேற்றோடு மூன்று மேடைகளில் அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவருடைய பேச்சின் முதல் ஐந்து நிமிடங்களில், பேச வேண்டிய பொருள் எதுவாயினும், ஒரே ஒலிநாடாவை திரும்பத் திரும்பக் கேட்கும் அனுபவத்தைத்தான் பார்வையாளர்கள் பெறுகின்றனர். நடுவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்தான். ஆனால், திரைப்படங்களினால் கிடைத்த வெளிச்சத்தில் மேடைக்கு வந்தவர் அல்லர். தமிழ் அவருக்களித்த மேடைகளின் வெளிச்சத்தால் திரைக்குச் சென்றவர். மேலும், அவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டம், திரைப்பட நடிகரைப் பார்க்கக் கூடும் கூட்டம் அல்ல. திரைப்பட நடிகரைப் பார்க்க வருபவர்கள் ஐந்து நிமிடங்களிலிருந்து அரை மணி நேரம் வரை இருப்பார்கள். நள்ளிரவு வரை தூக்கத்தை மறந்து, மூன்று மணி நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். நடுவரே தமது முடிவுரையில் கூறியபடி "இந்தத் தமிழ் நாளை கிடைக்குமா?" என்ற எண்ணத்தில் கூடுகின்ற கூட்டங்கள் இவை. இத்தகைய அவையில் அவர்களுக்குத் தேவையானதை மட்டுமே தர வேண்டும். எனவே, திருமதி. மலர்விழி அவர்கள் தனது பேச்சில் திரைப்பட விளம்பரத்தைக் குறைத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும், பாதிரியார் குறித்த நகைச்சுவையையும் கூட நேற்றைய பேச்சில் தவிர்த்திருக்கலாம்.

நான் பெரிய பேச்சாளனோ, அறிஞனோ அல்லன். "சொல்லுதல் யார்க்கும் எளிய" என்னும் வள்ளுவன் வாக்கினையும் நான் அறிவேன். ஒரு நிகழ்விலிருந்து நான் கற்றதையும், பெற்றதையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இப்பதிவின் நோக்கம்.

Friday 18 April 2014

மாற்றங்களை ஏற்போம்; மாற்றங்களை ஏற்படுத்துவோம்!

15-04-2014 அன்று மாலை மதுரையில் "மனிதத்தேனீ" ரா. சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய "மாற்றங்களை ஏற்போம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நானும் அப்பாவும் கலந்துகொண்டோம்.

சொக்கலிங்கம் அவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ, மகிழ்வோர் மன்றத்தில் நகைச்சுவைப் பேச்சாளராகவோதான் பார்த்திருந்தேன். புத்தக வெளியீட்டு விழாவில் ஏற்புரை ஆற்றும்போது, அவருக்குள்ளிருந்த அசல் பேச்சாளரைக் காண முடிந்தது. விழாவைக் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டியிருந்ததால் இருபது நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஆனாலும் அதிலேயே நமக்குப் பல விஷயங்கள் கிடைத்துவிட்டன.

"மாற்றங்களை ஏற்போம்" என்பது வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பாக இருந்தாலும், சமுதாயத்தில் சில மாற்றங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்தே அவர் பேச்சு இருந்தது.

வருமான வரி உட்பட வரிகளைச் சரியாக செலுத்தாதவருக்கு அரசாங்கத்தை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ, குறை கூறவோ எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்பதை தனது பேச்சில் வலியுறுத்தினார். அரசாங்கத்தை இன்று பலர் குறை கூறுகிறார்கள்; நாமும் ஆமோதிக்கிறோம். ஆனால் சற்று யோசித்தால், குறை கூறியவர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் என்பதை அறிய முடிகிறது.

சட்டமும், காவல்துறையும் சாமான்யனுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் கூறினார். மறுநாள் அவருடன் தொலைபேசியில் பேசியபோது, "காவல்துறை மட்டுமல்ல, எல்லா அரசு ஊழியர்களுமே சாமான்யர்களைத் துச்சமாகத்தான் மதிக்கிறார்கள்; நம்மால் என்ன செய்ய முடிகிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நம்மால் அவர்களைத் திருத்த முடியாதுதான்; ஆனாலும் நமது எதிர்ப்பைப் பதிவு செய்வதுதான் சரி" என்று கூறினார். அவர் சொல்வதும் சரிதான். எதுவும் நடக்காது என்று எல்லோரும் சும்மா இருந்தால், நம்மைக் கேட்க யாருமே இல்லை என்ற எண்ணம்தான் தவறு செய்பவர்களுக்கு வரும். அவர்கள் பாதுகாப்பாக உணர்வது சமூகத்திற்கு ஆபத்தானது. யாராவது செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் நாம்தான் செய்வோமே என்ற எண்ணத்தை அவருடனான உரையாடல் எனக்குள் ஏற்படுத்தியது. முதலில் நான் தவறுகளைத் தட்டிக் கேட்டால்தான் என் குழந்தைக்கு, "பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா" என்பதையும், "தெய்வம் நமக்குத் துணை பாப்பா" என்பதையும் உண்மையான உணர்வோடு சொல்லித்தர முடியும் என்பதை உணர்ந்தேன்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்தது. "இன்றும் காங்கிரஸ் கட்சிக்காரனாகத்தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று பெருமிதத்தோடு தனது பேச்சில் குறிப்பிட்டார். இன்றிருக்கும் நிலையிலிருந்து காங்கிரஸ் மீண்டு வரும் என்ற நம்பிக்கை அவர் பேச்சில் தென்பட்டது. இன்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தோற்க வேண்டிய கட்சிதான்; ஆனால் அழிய வேண்டிய கட்சி அல்ல. மேலும் இந்தியா முழுவதும் வேரூன்றியிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ் தலைதூக்க முடியாமல் போவது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. இவையெல்லாம் நமது அறிவுக்குப் புரிந்தாலும், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாட்டால், மக்கள் மனதில் உணர்வுரீதியான எதிர்மறைத் தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இவர் போன்றவர்களின் செயல்பாட்டால், காங்கிரஸ் கட்சியும், அதன் மூலம் நமது நாடும் எதிர்காலத்தில் மேம்பாடடையும் என்ற நம்பிக்கையை அவருடைய பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது.

அவரது அறிமுகமும், அவருடனான நட்பும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகக் கருதி மகிழ்கிறேன்.