Monday 14 September 2015

சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்

திண்ணை வாயில் பெருக்கவந் தேனென்னைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்
நித்தச் சோறினுக் கேவல் செயவந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வ முதவினான்.

என் தகுதியால் அன்று; தன் அளவிடற்கரிய கருணையினால், வித்தை நன்கு கல்லாத எனக்கு, சிறப்பு மிக்க இந்த மேடையையும், இந்த அவையையும் அருளிய எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் என் சென்னியுற வணங்குகிறேன்.

“சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்” என்னும் தலைப்பில் உரையாற்ற நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

“காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி” - என்பது ஞானக் கிழவி ஔவையின் வாக்கு. கிளி போல சில வார்த்தைகள் கற்ற நான் எனக்குத் தெரிந்தவற்றை திருப்பிச் சொல்ல வந்திருக்கிறேன். அவையஞ்சாமை குறித்து அறியாமையால் ஏற்பட்ட அஞ்சாமையினால் பேச முற்படுகிறேன்.

குருக்ஷேத்ரப் போர்க்களம். சேனைகள் அணிவகுத்து போருக்குத் தயாராய் நிற்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளாய் நிற்கின்றார்கள். எதிரணியில் இருக்கும் உறவினர்களின் மரணம் குறித்தும், அவர்களது மரணத்திற்குத் தானும், தனது போர்த்திறனும் காரணமாவது குறித்தும் துக்கிக்கிறான் அர்ஜுனன். போர்க்களத்தின் நடுவே, கண்ணன் அர்ஜுனனுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டி ஆன்ம தத்துவத்தை விளக்குகிறான்.

விளக்கத்தின் ஊடே, நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில்,

“இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு ராஜனுக்குக் கூறினான். இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்.” என்று பகவான் அர்ஜுனனுக்குச் சொல்லுகிறான்.

அர்ஜுனனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவன் கண்ணனிடம், “கண்ணா! உன் பிறப்புப் பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்து கொள்வதெப்படி?” என்று கேட்கிறான்.

பகவான் பதில் சொல்கிறான், “அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. நான் அவற்றையெல்லாம் அறிவேன்; நீ அவற்றை அறிகிலை.” என்று.

இதே கருத்தைத்தான் இரண்டாவது அத்தியாயத்திலும் கண்ணன் கூறுகிறான். “இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம்.

“ஆன்மா அழிவற்றான். இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறை யிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.” என்று கூறுகிறான்.

நீண்ட விளக்கத்திற்குப் பிறகு அர்ஜுனன் போரில் முனைகின்றான்; வெற்றியும் பெறுகிறான். போர் முடிந்த பிறகு கண்ணனும் அர்ஜுனனும் பாசறைக்குத் திரும்புகிறார்கள். போரில் வெற்றி பெற்ற மன்னனை சாரதி கை கொடுத்து தேரிலிருந்து இறக்கி விடுவது மரபு. தேரை நிறுத்தியவுடன், கண்ணன் தேரில் அமர்ந்துகொண்டே அர்ஜுனனைத் தேரிலிருந்து இறங்கச் சொல்கின்றான். அர்ஜுனன் தயக்கத்துடனே, “கண்ணா! மரபை மறந்தாயா?” என்று கேட்கிறான். கண்ணன் “நான் எதையும் மறக்கவில்லை. நான் சொல்வதைக் கேள். முதலில் தேரிலிருந்து இறங்கு.” என்று கூறுகிறான். அர்ஜுனனும் அரைமனதுடன் தேரிலிருந்து இறங்குகிறான். அவனைத் தொடர்ந்து கண்ணனும் இறங்குகிறான். குதிரைகளை அவிழ்த்து விடுகிறான். இருவரும் தேரிலிருந்து பத்தடி தூரம் சென்றவுடன் தேர் தீக்கிரையாகிறது.

அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் இதன் காரணத்தை கண்ணனிடம் கேட்கிறான். கண்ணன், “அர்ஜுனா! உன் மீது பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் போன்ற மாவீரர்களால் எய்யப்பட்ட அஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல. அவை தெய்வீக அஸ்திரங்கள். அவை உன்னைத் தாக்காத வண்ணம் நானும் உனது கொடியிலிருந்த அனுமனும் காத்தோம். முதலில் நான் தேரிலிருந்து இறங்கியிருந்தால் என்னைத் தொடர்ந்து அனுமனும் தேரிலிருந்து இறங்கியிருப்பான்.” என்று கூறுகிறான். அதன் பிறகே அர்ஜுனன் குருக்ஷேத்திர வெற்றி தனது வெற்றி அல்லவென்றும், அது தர்மத்தின் மற்றும் தர்மத்தின் மொத்த வடிவான பரமான்மாவின் வெற்றி என்பதையும் புரிந்து கொள்கிறான்.

அர்ஜுனன் பல கலைகளைக் கற்ற அறிஞன். அவனுக்கு ஆன்ம தத்துவத்தை உபதேசித்தவன் பரமாத்மாவும், ஆன்ம தத்துவத்தின் ஆதி குருவுமான கண்ணன். இருந்தபோதும் அர்ஜுனன் அந்தத் தத்துவத்தை முழுவதுமாக உணரவில்லை. குருக்ஷேத்திர வெற்றி தான் பெற்ற வெற்றி என்று மயக்கம் கொள்கிறான். ஆன்ம தத்துவத்தை அவன் முழுவதும் உணர அவனைப் போன்ற அறிஞனுக்கும் கூட மேலே கூறியதைப் போல சில அனுபவங்கள் தேவைப்படுகின்றன.

ஆக, ஆன்ம அறிவைப் பெற்றவனையும், எளிய சொற்களால் ஆன்மாவை விளக்கவல்லவனும் அறிவாளிகளுள் தலைசிறந்தவன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு விஷயத்தை நாம் பிறருக்குப் புரியம்படி எப்படிச் சொல்வது? பாரதி, பாஞ்சாலி சபதத்தில், சூதாட்டச் சருக்கத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதல் வரியை,

“தெளிவுறவே யறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்" என்று எழுதுகிறான்.

ஆக ஒரு விஷயத்தை விளக்குவதற்கு அதனை நாம் முழுமையாக அறிந்திருப்பது முதற்படி. ஒரு விஷயத்தை எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது ஆழமாக, தெளிவாக அறிந்த அறிஞராலேயே முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு நான் இனிச் சொல்லவிருப்பதை இந்த அவை கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்ணன் விளக்கிய அறிதற்கரிய ஆன்ம தத்துவத்தை, நமது தமிழ்ப் புலவர்கள் எவ்வாறு எளிமையாக விளக்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். தமிழருக்கு எந்தச் சந்தேகம் தோன்றினாலும், அவர்கள் முதலில் நாட வேண்டியவர் திருவள்ளுவராகத்தான் இருக்க முடியும். நானும் அவரைக் கேட்டேன். அவர்,

“உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” - என்று கூறுகிறார். உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் ஒரே உடலுக்கு மாறி மாறி நிகழ்வதைப் போல இறப்பும் பிறப்பும் இயல்பாய் ஒரே உயிருக்கு மாறி மாறி நிகழ்கிறது என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆன்மாவின் இயல்பு எது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். 18 அத்தியாயங்களில் கண்ணன் விளக்கிய ஆன்ம தத்துவத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் வள்ளுவர்.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று பெயர் பெற்ற திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்கவாசகர்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" - என்று கூறுகிறார்.

“மாதா வுடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை
கருப்பையூர் வாராமற் கா.” - என்று பாடுகிறார் பட்டினத்தார்.

எண்ணத் தொலையாத பல பிறவிகளில் பிறந்து பிறந்து, உழன்று உழன்று தன் ஆன்மா களைப்படைந்துவிட்டது என்று இறைவனிடம் முறையிடுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான். ஆனால் பட்டினத்தார் ஒரு படி மேலே போய், “நான் மட்டுமா பிறந்து பிறந்து களைத்துப் போனேன்? என்னைப் பெற்றுப் பெற்று, தாய்மார்கள் களைத்துப் போனார்கள். என்னைப் படைத்துப் படைத்து, என் விதியை எழுதி எழுதி பிரம்மாவும் களைத்துப் போனான்.” என்று கூறுகின்றார்.

எண்ணத் தொலையாத பிறவிகளைப் பற்றி குறிப்பாகச் சொன்னாரே திருவள்ளுவர், மாணிக்கவாசகரையும் பட்டினத்தாரையும் போலே நேரடியாகச் சொன்னாரா என்று தேடினேன். சொல்லியிருக்கிறாரே!

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து" - என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். இங்கே கல்வியோடு ஆன்மாவையும் நாம் பொருத்திப் பார்க்கலாம். கல்வி அழிவற்றது; ஆன்மாவும்தான். கல்வியை ஒருவர்க்குக் கொடுக்கும்போது குறைவதில்லை; மாறாக வளர்கிறது. ஆன்மாவும் ‘தான்’ என்பதை ஒழித்து பிறருக்காக வருந்தும்போது, உழைக்கும்போது, பயன்படும்போது மேம்பாடடைகிறது. இதிலே “எழுமையும்" என்பதற்கு “ஏழு பிறவிகளில் என்று பொருள் கொள்கிறோம். அவ்வாறின்றி “பிறவிகள் எழுந்தோறும்" என்றுதான் வள்ளுவர் கூறியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.

மேலும், “கடலில் எழும் அலை, கடலிலிருந்து எழுந்து மீண்டும் கடலிலேயே அடங்குகிறது. அது போல, பரமான்மாவிலிருந்து ஜீவான்மா பிரிந்து பிறப்பெய்துகிறது. பின் உடல் இறக்கும்போது மீண்டும் பரமான்மாவின் உள்ளே அடங்குகிறது. இது, கடலில் அலைகள் எழுந்தெழுந்து அடங்குவது போல இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறுகிறது.” என்று திருமழிசையாழ்வார் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆன்மாவையும், இறைதத்துவத்தையும் விளக்குகிறார்.

“தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத் தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை என்ன நீர்மையோ" - என்று கூறுகிறார் திருமழிசையாழ்வார்.

மேலும், கடல் வேறு அலை வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான்; இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. அதே போல பரமான்வும் ஜீவான்மாவும் ஒன்றுதான்; இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் இந்த உவமையின் மூலம் நாம் அறிய முடியும்.

“பாட்டுக்கொரு புலவன்” என்றும் “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா" என்றும் போற்றப்படுபவன் மகாகவி பாரதி. கண்ணன் பாட்டிலே கண்ணனைக் காதலனாகப் பாவித்து, “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்; கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்" என்று பாங்கியைத் தூது விடுக்கிறான். கண்ணன் மனநிலை தூது விடும் தலைவிக்கு சாதகமாக இல்லாமல் போனால் என்ன செய்வது?

“கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்
அந்நிய மன்னர்மக்கள் பூமியி லுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்” என்று நேரடியாக நெற்றியில் அடித்தது போலப் பெண்ணைப் பேச வைக்கிறான்.

இந்தப் பாடலிலே ஒரு நுட்பம் இருக்கிறது. பாரதியின் “கண்ணன் பாட்டு" நூலுக்கு முன்னுரை எழுதும் வ.வே.சு. ஐயர், “பாரதி பரபக்தியை விடச் சாரீகமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.

இந்தப் பாடலில் உலகியல் காதல் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் தலைவி, “கன்னிகை யாயிருந்து நாங்கள் காலங் கழிப்பமடி” என்று தோழியையும் சேர்த்துக்கொண்டு சொல்கிறாள். கண்ணனைத் தலைவி காதலிக்கின்றாள். கண்ணன் அவளை விட்டுப் பிரிந்தால், அவள் தனிமையில் வாழலாம்; அது நியாயம்; அது அவளது உரிமை. ஆனால் தோழியும் ஏன் கன்னிகையாய் இருக்க வேண்டும். கண்ணன் மீதான காதலில் அவளுக்கும் பங்கு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்பதுதான் பதில்.

கம்பராமாயணத்திலே ஒரு பாடல். ராமன் சீதையை மணம் செய்துகொண்டு நகர்வலம் வருகின்றான். சுற்றியுள்ள மக்களெல்லாம் ராமனின் மேனி அழகையும் கம்பீரத்தையும் ரசிக்கிறார்கள்; வர்ணிக்கிறார்கள். கூட்டத்திலே ஒரு பெண் சொல்கிறாள்:

“மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாணுத லொருத்தி யுள்ளம்
நெக்கென வுருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா வண்ணங் கண்ணெனும் புலங்கொள் வாயும்
சிக்கென வடைத்தேன் றோழி சேருது மமளி யென்றாள்"

“என் கண் வழியாகப் புகுந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வஞ்சனான ராமன் என் நெஞ்சத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் திரும்பிப் போகாவண்ணம் அவன் வந்த வாயிலான கண்ணைச் சிக்கென அடைத்துக் கொண்டேன். தோழி! எனக்கு மஞ்சம் செல்ல வழி காட்டு. நாம் இருவரும் அவனை அடைவோம் - சேருதும் அமளி" என்று கூறுகிறாள்.

உலகியல் காதலில் ஒரு பெண்ணின் கணவன் அவளுக்கு மட்டுமே கணவன். அவனுக்கு இன்னொருத்தி எவ்விதத்திலும் உரிமை கோருவதை அந்தப் பெண் அனுமதிக்க மாட்டாள். ஆனால், இறைவனைக் காதலிக்கும் பக்தி மார்க்கத்தில் இறைவன் ஒருவனே ஆண்பால்; மற்ற எல்லா உயிர்களும் பெண்பால். அவனை அடைவதுதான் அனைத்து உயிர்களின் லட்சியம்; உரிமையும் கூட. பரமான்மா என்ற ஆண்பாலை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவான்மாக்களும் ஒருசேர, ஒரே நேரத்தில் கலந்து அனுபவிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, ராமன் என்ற மனித உருவத்திற்குள் இருந்த பரமான்வை அடையாளம் கண்ட ஜீவான்மாவின் குரல்தான் இந்தப் பாடல். அதே போல பாரதியின் பாடலிலும், உலகியல் காதலைப் பொருத்திப் பார்த்து கவிதை இன்பத்தையும் நுகரலாம்; பரபக்தியுடன் பொருத்திப் பார்த்து ஆன்ம இன்பத்தையும் நுகரலாம்.

இவையெல்லாவற்றையும் விட ஒற்றை வரியில் உயிர்த் தத்துவத்தைச் சொன்ன தமிழ்ப் புலவரும் ஒருவர் இருக்கிறார். அவர்தாம் கணியன் பூங்குன்றனார். தமது “யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் பாடலில் “சாதலும் புதுவதன்றே" என்று முழங்குகிறார் கவிஞர். “இதற்கு முன் பல முறை இறந்திருக்கிறேன்; இனிமேலும் பல முறை இறப்பேன்; சாவது எனக்குப் புதிதல்ல.” என்பது இதன் பொருள்.ஆன்ம ஞானத்தைப் பூரணமாய்ப் பெற்றவனையன்றி வேறொருவனால் இப்படியொரு வரியை எழுதிவிட முடியாது.

மற்ற உயிர்கள் சாவதை நாம் அனுதினமும் பார்க்கிறோம், அதைப் பூங்குன்றனார் சொல்லியிருக்கலாமே. அவர் இந்த வரியில் ஆன்ம தத்துவத்தைத்தான் விளக்குகிறார் என்று சொல்வதற்கு சான்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். சான்று இருக்கிறது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் அவருடைய பெயரைக் குறிப்பிடவில்லை. அவருடைய ஊரின் பெயரையும், அவரது தொழிலையும் கொண்டு நாம்தான் அவருக்கு ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறோம். இதிலிருந்தே, கவிஞர் “நான் இந்தக் கவிதையை எழுதினேன்" என்ற அகங்காரத்தையும், “இது எனது அறிவு; எனது புலமை" என்ற மமகாரத்தையும் துறந்தவர் என்பதை நாம் அறிய முடியும். எனவே இது ஒரு ஆன்ம ஞானப் பாடல்தான் என்பது எனது துணிவு.

ஆன்ம ஞானத்தை எடுத்துக் காட்டியது ஒரு உதாரணம். இவ்வாறு அறிதற்கரிய பல விஷயங்களை எளிய சொற்களால் எடுத்துக் கூறிய நம் பண்டைத் தமிழ் இலக்கியகர்த்தாக்கள் அனைவருமே “சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்" என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித் திருநாடு!

பின்குறிப்பு: கடந்த 06-09-2015 அன்று கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தயார் செய்த உரை. பின்னர் சில காரணங்களால் இந்த விஷயத்தைப் பேசாமல் முற்றிலும் வேறு உரையைப் பேசினேன். நான் பேசிய உரை இங்கே: https://youtu.be/Sm03mRIW8Uc