Wednesday 9 March 2011

கதை எப்படிச் சொல்வது?

கதை சொல்லாவிட்டால் உனக்குப் புரியாது.
ஆனால் கதை எப்படிச் சொல்வது?

காற்றில் கலந்த கானம் போல்
இந்தக் கதையில் கரைந்து
காணாமல் போனவன் நான்.
என்னிடம் மிஞ்சிய சொற்களால்
மொழியைத்தான் காட்ட முடியும்...
கதையை அல்ல.

இருந்தாலும்...
உன் காதல்
என்னைக் கதை சொல்லத் தூண்டுகிறது.

என்னையும் அவளையும்
இரண்டு புள்ளிகளாக்கி
இறைவன் வரைந்த வட்டம்
இந்தக் கதை.
இப்போது எனக்கு ஒரு புள்ளிதான் தெரிகிறது.

உலகம்
நம் முகத்தைப் பிரதிபலிக்காமல் போனால்
பேச்சுக்கும் கதைக்கும்
இடமில்லாமல் போய்விடும்.

இதைப் புரிந்துகொள்ளாத வரை
அவள் முன்னால்
நானும் இப்படித்தான் நின்றேன்.

வாழ்க்கையை அறிந்த கணத்தில்
வார்த்தைகளை இழந்துவிட்டேன்.

கதை சொல்லாவிட்டால் உனக்குப் புரியாது.
ஆனால் கதை எப்படிச் சொல்வது?

Tuesday 8 February 2011

சாக்லெட் வாங்க வேண்டும்

கொடைக்கானல்
பசுமைப் பள்ளத்தாக்கை
ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு இளைஞன்
ஓடி வந்து
உள்ளே பாய்ந்துவிட்டான்.

சற்றே அதிர்ந்தது கூட்டம்.
ஆளுக்கொன்று சொல்லிவிட்டு
அரை நிமிடத்தில் கலைந்தார்கள்.

ஒருத்தி சொன்னாள்...
சாவு வரும் நேரத்தை யாரறிவார்?

நான் சொன்னேன்...
சீக்கிரம் வா
சாக்லெட் வாங்க வேண்டும்.

Wednesday 2 February 2011

வார்த்தைகள்

வந்து
விழுந்து கொண்டேயிருந்தன
வார்த்தைகள்.

தலை கவிழ்ந்து
அமர்ந்திருந்தேன்
நான்.

அலை போன திசையெல்லாம்
அலைப்புண்டு
கரை சேர்ந்தபின்
மீதமிருந்த
வெறுமையை நிரப்பின
வார்த்தைகள்.

Sunday 30 January 2011

பா(ர)தியை இழந்துவிட்டோம்...

பாரதி தமிழுக்கு மகுடம் தந்த தலைசிறந்த கவிஞன்.  அவனது இலட்சியப் பாதையில்தான் எத்தனை தடைக்கற்கள்...!

பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இலட்சியவாதி ஒருவன் இல்லற வாழ்க்கையிலும் சிக்கிக்கொண்டானானால் என்ன பாடுபடுவான் என்பதற்கு பாரதியின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.

பாரதியின் நடவடிக்கையும் அவன்றன் மனைவியின் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது.  ஒரு கவிஞனின் காதல் வேகம் அலாதியானதாய் இருக்கும்.  அதற்கு ஈடு கொடுக்க இயலாது சராசரி வாழ்க்கைச் சுழலில் செல்லம்மா சிக்கி இருதலைக் கொள்ளியாய்த் தவிக்கின்றாள்.  பாரதியின் கோணத்தில் பாரதியின் வாழ்க்கை முறை சரியானது.  செல்லம்மாளின் கோணத்தில் அவளது வாழ்க்கை முறையும் சரியானதுதான்.  இரண்டு சரியான பாதைகள்; இரண்டு சரியான மனிதர்கள்.  ஆளுக்கொரு பாதையில் பயணம் மேற்கொள்ளும்போது பயணம் இனிப்பதுமில்லை, பெரிய பயனை அளிப்பதுமில்லை.

பாரதியின் எண்ணங்கள் பெரியன; இலக்குகள் பெரியன.  அவனது ஒவ்வொரு அசைவும் நாட்டின் நன்மை கருதியே இருந்தது.  பெரிய இலக்குகளுக்கு முன்னே அவனுக்கு அவனது வீட்டின் நலம் கவனிக்கத் தக்கதாய் இருந்திருக்காது; அதற்காக அவன் வருந்தவும் இல்லை.  ஆனால் செல்லம்மாளின் உலகம் வேறு.  அவள் அறிந்திருந்ததெல்லாம் பாரதியும் அவளுடைய குழந்தைகளுமே.  "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதரின்" செயலால் அவள் அவ்வளவுதான் அறிந்திருந்தாள்.  அது பாரதியின் குற்றமுமன்று.

எந்த அளவுக்கு நாட்டு விடுதலைக்கும், சமுதாய சீர்திருத்தத்துக்கும் பாரதி பாடுபட்டானோ, அதே அளவு செல்லம்மாளை மகிழ்விக்கவும் அவன் பாடுபட வேண்டிய சூழ்நிலையில் இருந்தான்.  கவிஞன் பசி, தூக்கம், நோய், மரணம், இன்பம், துன்பம் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். ஆனால் அவனது மனைவியும் அப்படியிருக்க வாய்ப்பில்லையே.

ஒரு விளையாட்டு வீரன் தன மனைவி குறைந்தபட்சம் விளையாட்டில் ஆர்வமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.  அது அமையாத பட்சத்தில் அவன் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து போகிறது.  ஒவ்வொரு ஆணும் தனது மனைவியே தனது முதல் ரசிகையாக இருக்க வேண்டும்; தனது முதல் விமரிசகராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.  ஒரு தாய் தனது குழந்தையைப் பாவிப்பது போல் ஒரு கவிஞன் தன் படைப்பினை பாவிக்கின்றான்.  அவனது படைப்புக்கு மனைவி பாராமுகம் காட்டும்போது மனம் தளர்ந்து போகின்றான்.  இதற்கெல்லாம் கவலைப்படாத இலட்சிய வெறியனாக பாரதி இருந்தபோதிலும் இது அவனை சிறிதளவாவது நிச்சயம் பாதித்திருக்கும்.

ஒரு இலட்சியவாதி தன் வறுமையைப் பொருட்படுத்துவதில்லை.  ஆனால் ஒரு சம்சாரி தன் மனைவி மற்றும் குழந்தைகளின் வறுமையைப் போக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறான்.  ஒரே நேரத்தில் இரு வேறு பாதைகளில் போக வேண்டிய கட்டாயம் பாரதிக்கு ஏற்படுகிறது.  அதனால் அவனது வேகத்தில் தொய்வு ஏற்படுகிறது.

இல்லற வாழ்க்கையில் மட்டும் பாரதி ஈடுபடாமலிருந்திருந்தால் இந்தியா அவனிடமிருந்து இன்னும் இன்னும் ஏராளம் நன்மைகளை அடைந்திருக்கும்.  இல்லற வாழ்க்கையினால் இந்தியா நிறைய இழந்துவிட்டது.

Saturday 29 January 2011

பேசாமல் இரு

நாற்காலியில் அமர்ந்து
இலக்கில்லாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
பதிலேதும் இல்லை.

ஏன் பேசாமல் இருக்கிறாய்?
மீண்டும் கேட்டேன்.

பதில் வந்தது.
பேசாமல் இரு...

Friday 28 January 2011

அங்கே இல்லை

நான்கு சுவர்களுக்குள்
நான்
சிறையிருந்தேன்.

சுவரை
இடித்துவிட்டேன்.

ஆனால்
உலகம்
அங்கே இல்லை.