Thursday 31 August 2017

எது அசல்?

நாளை (01-09-2017) முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இப்படி ஒரு ஆணை வெளியிடுவதற்கான தேவை என்ன என்று இந்த அரசாங்கம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தான்தோன்றித் தனமாக சட்டம் போடுவதற்கு இந்த நாடு என்ன மன்னராட்சி நாடா? இல்லை இப்படியெல்லாம் ஆணையிட இந்த அமைச்சர் என்ன இந்த நாட்டின் சர்வாதிகாரியா? அசல் ஆவணங்கள் தொலைந்து போனால், போக்குவரத்துத் துறையில் அவற்றுக்கான மாற்று ஆவணங்கள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாது. சாமான்யனுக்குத்தான் தெரியும். அதே போல சாலையில் வாகனச்சோதனை செய்யும் போலீஸ் அதிகாரியின் கையில் நமது அசல் ஆவணங்களைக் கொடுத்தால் அவர் எப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்பதும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாது. அதுவும் சாமான்யனுக்குத்தான் தெரியும். ஆனால் என்ன உள்நோக்கத்தோடு இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்கள் என்பது சாமான்யனுக்குத் தெரியாது. அது உங்களுக்குத்தான் தெரியும்.

மக்கள் அசல் ஆவணங்கள் வைத்திருப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மாண்புமிகு அமைச்சர் அவர்களே, இப்போது தமிழ் நாட்டில் நடக்கின்ற ஆட்சி அசல் ஆட்சிதானா? நீங்களெல்லாம் அசல் அமைச்சர்கள்தானா? இந்த மக்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சமீப காலமாக தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பமும் எல்லோருக்கும் தெரியும். நியாய உணர்வுள்ளவர்களாகவும், தர்மத்தின்பால் பற்றுள்ளவர்களாகவும், மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவர்களாகவும் (மானத்தைப் பற்றி உங்களிடம் பேசிப் பயனில்லை) நீங்கள் இருந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? அல்லது குறைந்த பட்சம் இந்தப் போலி ஆட்சியில், இப்படியெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஆணைகளை வெளியிட்டு துன்பப்படுத்தாமலாவது இருந்திருக்க வேண்டாமா?

எவன் கேட்கப் போகிறான் என்ற அலட்சியம். அதுவும் உண்மைதான். எவனும் கேட்க மாட்டான். அடுத்த தேர்தலில் நீங்களே மீண்டும் வந்து பணத்தை வீசி எறிந்தால் பொறுக்கிக்கொண்டு உங்களுக்கே ஓட்டும் கூடப் போடுவான். சொரணை இல்லாத மக்களுக்கு உங்களைப் போன்ற அராஜக ஆட்சியாளன்தான் கிடைப்பான். நடத்துங்கள் தர்பாரை!

ஆண்மையுள்ளவர்களாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் உங்கள் தனி செல்வாக்கில் மட்டும் தேர்தலை வென்று அசல் ஆட்சி நடத்துங்கள். அது இதை விடக் காட்டாட்சியாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எது அசல் என்பதை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.