Tuesday 24 February 2015

மதமாற்றப் பித்து

மரியாதைக்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவதும், அதனை அனுமதிப்பதும் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தராது. மாறாக மக்கள் அபிமானத்தைக் கெடுக்கவே செய்யும்.

மதமாற்றம்தான் அன்னை தெரசாவின் நோக்கமாகவே இருந்திருந்தாலும் கூட (நான் அதை நம்பவில்லை) அவருடைய தொண்டு எதனோடும் ஒப்பிட முடியாதது. யாரும் செய்ய முடியாத (நினைக்கவும் முடியாத) சேவையை தம் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறார். இன்று மதம் மாற்றுவதை மட்டும் தம் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றிப் பேசுவதைப் போல இவரைப் பற்றி நிச்சயமாகப் பேசக்கூடாது. இருவரையும் ஒப்பிட்டுப் பேசுபவன் மூடனாகத்தான் இருப்பான். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதுதான் அறிவுடையவர்களின் செயலாக இருக்க முடியும்.

"ஐயோ மதம் மாற்றுகிறார்கள்" என்று கூப்பாடு போடுவதினாலோ மதம் மாற்றுபவர்களை குற்றம் கூறுவதாலோ மதமாற்றத்தை தடுத்து விட முடியாது. மதமாற்றம் செய்வதில் மாற்றுகிறவனின் பங்குக்கு, மாறுகிறவனின் பங்கு ஒன்றும் குறைந்தது அல்ல. மேலும், மதம், கடவுள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புரிதலும் இல்லாதவன்தான் மதம் மாறுவான். அவனால் எந்த மதத்துக்கும் - எந்தக் கடவுளுக்கும் - லாபமுமில்லை; நஷ்டமுமில்லை.

எனவே, மதமாற்றம் குறித்துப் பேசுவதே தேவையற்றது. அதை விட்டுவிட்டு ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வேறு உருப்படியான வேலையைப் பார்க்கலாம். இல்லை, பேசித்தான் தீர வேண்டும் என்றால், யாரையும் இழிவுபடுத்தாமல் கவனமாகப் பேசுவது நல்லது.

Sunday 8 February 2015

எனக்குப் பிடித்த குறள்


ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் கசடறக் கற்றவன் அல்லன் ஆகையால், ‘எனக்குப் பிடித்த குறள்’ என்னும் பொருளில் ஏதேனும் சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆசையின் நிமித்தம் இதனை எழுதுகின்றேன்.

அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறட்பாக்களில் எதையும், எந்தக் காரணம் காட்டியும் ஒதுக்கிவிடவோ, குறைத்து மதிப்பிடவோ முடியாது. இருப்பினும், நாம் வாழும் சூழலுக்கேற்பவும், நாம் சந்தித்த அனுபவங்களுக்கேற்பவும் சில பாக்கள் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றன.

என் உள்ளம் கவர்ந்த குறள் இதுதான்:

இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு. (
987)

சான்றோர்கள் என்று நாம் போற்றும் யாருடைய வாழ்க்கையை நாம் கவனித்தாலும், அவர்கள் எந்த பேதமுமின்றி எல்லோருக்கும் இனியவே செய்ததை நாம் அறிய முடியும்.

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, தம் வாழ்நாள் முழுவதும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தவர் மட்டுமல்லர்; வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் போதித்தது மட்டுமல்லாது, தம் வாழ்நாளின் கடைசி நொடி வரை கடைப்பிடித்தும் காட்டியவர். தென்னாப்பிரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, அவர் மீது கடும் குரோதத்துடன் நடந்தவர்கள் மீது கூட அவர் கோபம் கொண்டதில்லை. மாறாக, தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் யாருக்கும் பாதிப்பில்லாத ஒரு சமரசப் புள்ளியை எட்டுவதற்கே முயற்சி செய்தார்.

ஜெயகாந்தன் தம் நாவல் ஒன்றில் “நமது கொள்கைக்கு எதிரான கருத்துக்களை யாரும் பேசுவதை நாம் விரும்பவில்லை என்றால், நாம் கடைப்பிடிக்கும் தர்மத்தில் நமக்கே நம்பிக்கை இல்லையென்று பொருள்” என்று கூறுவார். நமக்கு எதிரான கருத்துக்கள் நம்மைப் பண்படுத்துகின்றன. அவதூறாகவும் அநாகரிகமாகவும் இருந்தாலும் கூட, தமக்கு எதிரான கருத்துக்களுக்கு பதில் சொன்னவர் அல்லர் நமது பெருந்தலைவர் காமராஜர். “எனக்கு யானைக்கால் என்று யாராவது சொன்னால், ஒவ்வொருவரிடமும் என் காலைக் காட்டிக்கொண்டா இருக்க முடியும்?” என்று கூறிவிட்டு தம் காரியமே கண்ணாக இருந்தவர். தாம் முதல்வராக ஆட்சி அமைத்தபோது தம்மை எதிர்த்து அரசியல் செய்தவர்களுக்கும் மக்களின் நன்மையை முன்னிட்டு அமைச்சரவையில் இடமளித்தவர்.

ஒரு செல்வந்தரிடம் நன்கொடை வேண்டிச் சென்றிருந்தார் அன்னை தெரசா. அந்த செல்வந்தரோ அன்னையின் முகத்தில் உமிழ்ந்தார். அன்னையின் கனிவான தோற்றம் சற்றும் மாறவில்லை. உள்ளார்ந்த அன்புடன் அவர் கூறினார், “ஐயா! தாங்கள் இப்போது தந்ததை நான் வைத்துக்கொள்கிறேன். உங்கள் உதவிக்காகக் காத்திருக்கும் கஷ்டப்பட்ட ஜீவன்களுக்கு ஏதேனும் தாருங்கள்” என்று கூறினார். இதுவல்லவோ சான்றாண்மை!


ஆகையால் சான்றாண்மை பயில விரும்பும் ஒவ்வொருவருக்கும் பற்றுக்கோலாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் குறள் இதுதான் என்று நான் திடமாக நம்புகிறேன்.