Monday 8 September 2014

வாழிய செந்தமிழ்!




இது திருநெல்வேலியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் பள்ளி. இதன் சுற்றுச்சுவரில் "ENGLISH ZONE" என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தப் பள்ளி வளாகம் தமிழ் உட்பட ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் தடை செய்யப்பட்ட பகுதி என்பதாகும். இந்தப் பள்ளி ஒரு உதாரணம் மட்டும்தான். இதைப் போன்ற இன்டர்நேஷனல், CBSE மற்றும் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் தமிழகம் முழுக்க இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் ஹிந்தியை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தியை விரட்டுவதன் மூலமும், தமிழைப் பள்ளிகளில் தடை செய்வதன் மூலமும்தான் தமிழை வளர்க்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களோ என்னவோ!

தமிழ்க் குழந்தைகளை மாணவர்களாகக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் பள்ளியில், தமிழ் தடை செய்யப்பட்ட மொழி என்பது எத்தனை பெரிய அவமானம். இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் பல பெற்றோர்.

சாதாரண மக்கள் இதைப் பெருமையாகக் கருதுவதைப் பற்றி நாம் கவலைப்பட இடமில்லை. தமிழின் பெயரால் அரசியலும், பிழைப்பும் நடத்தும் பெரும்பான்மையான வாய்ப்பேச்சு வீரர்களின் குழந்தைகளும் கூட இத்தகைய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்பதுவே கசப்பான உண்மை.

இத்தகைய வேஷதாரிகளின் பேச்சையும், தமிழைத் தடை செய்யும் பள்ளிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். "ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளியாக முடியும்" என்ற அடிமைப் புத்தியும் நம்மிடமிருந்து விலக வேண்டும்.

தமிழும், தமிழனும் வளர வேண்டுமானால், அதற்கு வழி தமிழைக் கற்பதுதானே தவிர, பிற மொழிகளை விரட்டுவது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எந்த மொழியைப் படித்தாலும், படிக்காவிட்டாலும் தமிழைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு!

Sunday 7 September 2014

தமிழ் படிப்போம்!

நேற்று மாலை (06-09-2014) மதுரைப் புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தனின் சிறப்புரை.

"தமிழில் இல்லாதது எதுவும் இல்லை. என்ன கேள்வி என்றாலும் திருக்குறளில் பதில் இருக்கிறது. ஆனால் இன்று வெளிநாட்டு அறிஞர் சொன்னால்தான் நம்மவர்களுக்கு எதுவும் பிடிக்கிறது" என்று தமது உரையில் குறிப்பிட்டார். நமது கல்வி முறையும், இன்றைய நமது கல்விச்சாலைகளும் இத்தகைய சமுதாயத்தைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

அரங்கம் முழுவதும் நல்ல கூட்டம். இத்தகைய கூட்டத்தைக் கூட்டும் - அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் வல்லமையுடைய பேச்சாளர்களும் அறிஞர்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று எப்போதும் நான் எதிர்பார்ப்பேன். நேற்று அப்பணியை பேராசிரியர் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்தார்.

"நிகண்டு படிக்காமல் தமிழ் படிப்பு நிறைவடையாது" என்றும் ஒரு கூற்றை முன்வைத்தார் பேராசிரியர். வாரியார் சுவாமிகள் தமது "கம்பன் கவிநயம்" என்னும் நூலில் ஓரிடத்தில் "சொல்லுதல்" என்னும் சொல்லுக்கு நிகரான சொற்கள் அனைத்தையும் அவற்றின் பொருளுடன் பட்டியலிட்டுக் காட்டியிருப்பார். புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படாத உணர்வும் புரிதலும் பேராசிரியர் பேச்சின்போது ஏற்பட்டது. மொழியைச் சரியாகவும் திறம்படவும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கான அரிச்சவடி இது. தமிழ் மொழியின் வளத்தை வாரியார் சுவாமிகளின் புத்தகம் நமக்கு காட்டியதென்றால், "நீ வாசலைத்தான் பார்த்திருக்கிறாய்; மாளிகையின் உள்ளே வா" என்று அழைக்கிறது பேராசிரியரின் பேச்சு.

"தமிழில் பக்தி இலக்கியம் பக்தியை மட்டும் சொல்வதில்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் கலந்துதான் பக்தி இலக்கியம் படைக்கப்படுகிறது" என்று ஆண்டாள் பாசுரங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் பாடலில் ஒரு உதாரணம் மட்டும்தான் நேற்று கூறினார். நான் "எப்போ வருவாரோ" தொடர் சொற்பொழிவில் ஆண்டாள் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவை நினைவுகூர்ந்தேன். அந்த உதாரணம் நிச்சயம் கூட்டத்தில் கணிசமானவர்களை அவரவர் கொண்டிருந்த ஆண்டாள் பாசுர அனுபவத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் விட, பேராசிரியரின் பேச்சின் வழியாக எனக்குக் கிடைத்த உன்னதமான விஷயம்: அறிவியல், கணிதம் முதலியவற்றைப் போலவே - சொல்லப்போனால் அவற்றை விட ஒருபடி அதிகமாக - ஆச்சர்யங்களையும், ஆனந்தத்தையும் தமிழ் படிக்கும்தோறும் - கேட்கும்தோறும் அள்ளித்தரும் என்பதுதான்.