Thursday 24 July 2014

தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே...

நேற்று இரவு, ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசலசாமி கோவிலில் முனைவர் கு. ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம். பொருள் "ஆன்மிகம் தழைக்க பெரிதும் தேவை - பக்தி நெறியே / தொண்டு நெறியே" என்பது. குடும்பத்துடன் சென்றிருந்தேன். அது குறித்த சில வார்த்தைகள்...

முதலில் கூற வேண்டிய விஷயம், போன நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதுதான். நிறைய புதிய விஷயங்களையும், நல்ல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.

வாளால் மகவரிந்து ஊட்டிய சைவரின் கதை நான் அறிந்தது. அதே போன்ற வைணவர் கதையைக் கூறி, பக்தன் யார் என்பதையும், பக்தி எது என்பதையும் அடையாளம் காட்டினார்கள். "பலனை எனக்களித்துவிட்டு பணி செய்" என்று அர்ஜுனனை குருக்ஷேத்திர யுத்தத்தில் ஏவுகிறார் கிருஷ்ண பரமாத்மா. நீண்ட மனப் போராட்டங்களுக்குப் பிறகு, அர்ஜுனன் சர்வபரித்தியாகம் செய்து "கிருஷ்ணா! எனக்கு நன்மையானது எதுவென்று சொல்; அதையே செய்கிறேன்" என்று பரமாத்மாவைச் சரணடைகிறான். எளிதில் புரிந்துகொள்ள முடியாத இந்தச் சரணாகதித் தத்துவ விளக்கத்தை, சிறு கதையின் மூலம் விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அதே போல, ஒரு துறவிக்காக  நரசிம்ம மூர்த்தியைப் பிடித்து வந்த வேடனின் கதையைச் சொல்லி, தொண்டனை அடையாளம் காட்டியதும் கூட அபாரமானது. ஏழைக்களித்த வாழைப்பழம் எம்பெருமானை அடைந்த கதையும் கூட, தொண்டனை அடையாளம் காட்டுவதுதான். இறைவனுக்கு செய்யும் தொண்டை விட, மக்களுக்கு செய்யும் தொண்டு இறைவனை நேரடியாக அடைவதைப் படம் பிடித்துக் காட்டும் கதைகள் இவ்விரண்டும்.

பக்தர்கள் அணியில் திரு. சங்கர் ராம் அவர்களும், தொண்டர்கள் அணியில் திருமதி. இந்திரா அவர்களும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். குறிப்பாக, இந்திரா அவர்களின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது. மேலே கூறியவற்றில் வேடன் நரசிம்ம மூர்த்தியைப் பிடித்த கதை அவர் கூறியதுதான்.

தொண்டர்கள் அணியில், திரு. செல்லக்கண்ணனின் பேச்சில் குறைகள் இல்லையென்றாலும், அவருடைய பேச்சு அணிக்கு வலு சேர்க்கவில்லை. சொல்ல விழைந்த விஷயத்தை நெற்றியில் அடித்தாற்போல் அவர் சொல்லவில்லை. முருகப் பெருமானிடம் பெரியது எதுவென்று கூறும் ஔவை, "தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே" என்று கூறுகின்றார். அதைச் சொல்ல முற்பட்ட பேச்சாளர் பாடலை மறந்தது மட்டுமல்லாமல், அதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கவும் தவறிவிட்டார்.

ஔவை "பக்தர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே" என்று கூட சொல்லியிருக்கலாம். பக்தர் என்ற வார்த்தையும், தொண்டர் என்ற வார்த்தையும் ஒரே ஒலியளவை (தேமா) உடையனவே. இரண்டில் எதைப் பயன்படுத்தியிருந்தாலும் பாட்டுக்குப் பங்கம் இல்லை. "அனைத்துத் தமிழர்களுக்கும் ஞானப் பால் ஊட்டும் அன்னையாகிய ஔவையை விடவா இன்னொரு நடுவர் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்க வேண்டும்?" என்று அவர் கேட்டிருந்தால், அதற்குப் பிறகு, அவை தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதிருந்திருக்காது. விஷயத்தைத் தொட்ட அவர், விளக்கமாக சொல்லத் தவறிவிட்டார்.

திருமதி. மலர்விழி அவர்களின் பேச்சு திருப்திகரமாக இல்லை. சென்ற வருடம் நெல்லை புத்தகக் கண்காட்சியில் தொடங்கி, நேற்றோடு மூன்று மேடைகளில் அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவருடைய பேச்சின் முதல் ஐந்து நிமிடங்களில், பேச வேண்டிய பொருள் எதுவாயினும், ஒரே ஒலிநாடாவை திரும்பத் திரும்பக் கேட்கும் அனுபவத்தைத்தான் பார்வையாளர்கள் பெறுகின்றனர். நடுவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்தான். ஆனால், திரைப்படங்களினால் கிடைத்த வெளிச்சத்தில் மேடைக்கு வந்தவர் அல்லர். தமிழ் அவருக்களித்த மேடைகளின் வெளிச்சத்தால் திரைக்குச் சென்றவர். மேலும், அவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டம், திரைப்பட நடிகரைப் பார்க்கக் கூடும் கூட்டம் அல்ல. திரைப்பட நடிகரைப் பார்க்க வருபவர்கள் ஐந்து நிமிடங்களிலிருந்து அரை மணி நேரம் வரை இருப்பார்கள். நள்ளிரவு வரை தூக்கத்தை மறந்து, மூன்று மணி நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். நடுவரே தமது முடிவுரையில் கூறியபடி "இந்தத் தமிழ் நாளை கிடைக்குமா?" என்ற எண்ணத்தில் கூடுகின்ற கூட்டங்கள் இவை. இத்தகைய அவையில் அவர்களுக்குத் தேவையானதை மட்டுமே தர வேண்டும். எனவே, திருமதி. மலர்விழி அவர்கள் தனது பேச்சில் திரைப்பட விளம்பரத்தைக் குறைத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும், பாதிரியார் குறித்த நகைச்சுவையையும் கூட நேற்றைய பேச்சில் தவிர்த்திருக்கலாம்.

நான் பெரிய பேச்சாளனோ, அறிஞனோ அல்லன். "சொல்லுதல் யார்க்கும் எளிய" என்னும் வள்ளுவன் வாக்கினையும் நான் அறிவேன். ஒரு நிகழ்விலிருந்து நான் கற்றதையும், பெற்றதையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் இப்பதிவின் நோக்கம்.

1 comment: