Wednesday 16 January 2013

சாதலும் புதுவ தன்றே

இன்று காலையிலிருந்து "சாதலும் புதுவ தன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை என் மனது அசை போட்டுக்கொண்டே இருக்கின்றது.

நேற்று மதுரைக் கம்பன் கழக மாதாந்திரக் கூட்டத்தில் திரு. வாசுதேவ கோவிந்தாச்சார்யா என்பவர் "கம்பனும் கீதையும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கம்பன் ஒரு பாடலில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும், உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் உவமையாக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். "உண்மையில் சூரியன் உதிப்பதுமில்லை; மறைவதுமில்லை. அது ஒரு தோற்றம் மட்டுமே. அதே போல் உயிர் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. அதுவும் ஒரு தோற்றம் மட்டுமே. கீதை கூறிய இந்த மாபெரும் உண்மையை கம்பன் இந்த எளிய உவமையைக் கொண்டு நிறுவுகிறான்." என்று கீதையையும் கம்பனையும் தொடர்புபடுத்திக் காட்டினார் பேச்சாளர்.

சூரியன் மையத்தில் இருக்கிறது என்பதையும் பூமி உட்பட ஒன்பது கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதையும் பௌதீகத்தில் படித்ததிலிருந்து இன்று வரை சூரியன் உதிப்பதும் மறைவதும் தோற்றமயக்கம் என்ற கோணத்தில் ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இந்தக் கோணத்தில் பார்க்கும்போதுதான் "சாதலும் புதுவ தன்றே" என்ற வரிகள் எத்துணை மகத்துவம் வாய்ந்தவை என்பதை உணர முடிகிறது. எவ்வளவு பெரிய அறிவாளிகளின் வழிவந்தவர்கள் நாம் என்ற பிரமிப்பிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.

No comments:

Post a Comment