Monday 17 December 2012

பாரதி விழா

திட்டமிட்டபடியே மதுரைக் கம்பன் கழகத்தின் பாரதி விழாக் காணச் சென்றிருந்தேன். நல்ல பல விளக்கங்கள் கிடைத்தன என்றாலும் பட்டிமன்ற நிகழ்வினைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

பாரதி அணியில் பேசிய பேச்சாளர்கள் மூவருமே மிகச் சிறப்பாகப் பேசினார்கள். ஔவை அணியில் பாரதி பாஸ்கர் தவிர மற்ற இருவரும் மிகச் சாதாரணமாகவே பேசினார்கள். இரு அணியினரும் பேசியதை மதிப்பிட்டு நடுவர் தீர்ப்புக் கூறியிருப்பார் என்றால் ஔவை அணி தோற்றுப் போயிருக்கும். அவ்வளவுதான் பேசினார்கள் ஔவை அணியினர்.

ஔவை அணியினர் பேசியிருக்க வேண்டியதையெல்லாம் முடிவுரையில் சாலமன் பாப்பையா பேசி இரண்டு ஆத்திசூடியுமே இன்று தேவைப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

திரு. தா.கு.சுப்பிரமணியம் அவர்களும் திருமதி. ரமணி அவர்களும் ஜனரஞ்சகப் பட்டிமன்றத்தில் பேசுவது போலப் பேசி அவையின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

"ரௌத்திரம் பழகு", "போர்த்தொழில் பழகு", "சீறுவோர்ச் சீறு", "வெட்டெனப் பேசு", "வெடிப்புறப் பேசு" என்றெல்லாம் பாரதி சொன்னவற்றுக்கு கணவன்-மனைவி சண்டையை உதாரணமாக்கி திருமதி. ரமணி பேசியது அவைக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதப்படும். அறிஞர்கள் நிறைந்த அவையில் ஏன் இப்படிப் பேசினார் என்பது எனக்கு விளங்கவில்லை.

மற்றபடி பல விஷயங்களில் இந்தப் பட்டிமன்றம் எனக்கு தெளிவை ஏற்படுத்தியது.

1) "ஏற்பது இகழ்ச்சி" என்றும் "ஐயம் இட்டு உண்" என்றும் ஔவை ஏன் முரண்பட்டுப் பேசுகிறாள் என்பதற்கு, முன்னது உழைத்துப் பொருள் சேர்க்கும் ஆண்களுக்காக சொல்லப்பட்டது என்றும் பின்னது இல்லிருந்து விருந்தோம்பும் பெண்களுக்காக சொல்லப்பட்டது என்றும் பொதுவாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார்கள்.

2) "போர்த் தொழில் பழகு" என்று பாரதி சொன்னது கத்தியெடுத்து சண்டை போடுவதை மட்டும் குறிக்கவன்று. போரில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக இந்த அவையில் நிகழ்வது சொற்போர். எனவே பாரதி சுதந்திரப் போரில் மக்களைத் தூண்டிவிடும் ஒரு காரியத்திற்காக மட்டுமல்ல, பரந்து விரிந்த பார்வையில்தான் இவ்வாறு கூறியிருப்பான். ஒரு மகாகவியின் கூற்றை சிறிய வட்டத்துக்குள் பொருத்தி அர்த்தம் காணக்கூடாது.

3) "கோல் கைக்கொண்டு வாழ்" என்றால் சண்டைக்குப் பயன்படும் தடியைக் கைக்கொள் என்று பொருள் காணக்கூடாது. செங்கோல் என்று பொருள் கொள்ள வேண்டும். செங்கோல் என்றால் ஆட்சி செலுத்துவது மட்டுமல்ல; நெறி தவறாமல் வாழ்வது என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நாமே புரிந்துகொள்ள முடியும்.

4) "சில இடங்களில் ஔவை தொடாத உச்சங்களை பாரதி தொட்டிருந்தாலும், பொதுவாக, பல இடங்களில் ஔவையைத் தாண்டிச் செல்ல முடியாதவனாக, அவள் பின்னால் செல்பவனாகவே இருக்கின்றான்" என்று தனது தீர்ப்பில் சாலமன் பாப்பையா கூறினார். "பணத்தினைப் பெருக்கு" என்று பாரதி சொன்னதை மேற்கோள் காட்டி பாரதி அணியினர் பேசியதற்குப் பதில் கூறும் வகையில் "அஃகம் சுருக்கேல்" என்று ஔவை கூறியிருப்பதாக ஔவை அணியினர் கூறினர். ஆனால் இதையெல்லாம் விட நேரடியாக "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு" என்றும் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்றும் ஔவை கொன்றைவேந்தனில் கூறியிருப்பதை நடுவர் உட்பட யாரும் மேற்கோள் காட்டவில்லை.

சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் இந்த விழாவினால் நன்மையே விளைந்துள்ளது. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வோம்.

No comments:

Post a Comment