Wednesday 12 December 2012

ஆத்திசூடி


வரும் ஞாயிற்றுக்கிழமை (16-12-2012) மதுரைக் கம்பன் கழகத்தினர் பாரதி விழாக் கொண்டாட இருக்கின்றனர். மாலையில் “இன்றைய உலகத்திற்குத் தேவை – ஔவையின் ஆத்திசூடியா அல்லது பாரதியின் ஆத்திசூடியா?” என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.

பொதுவாகவே இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு சூழ்நிலைகளில் எழுதப்பட்டன என்றாலும் இரண்டும் இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதாகவே இருக்கின்றன. ஆனாலும் ஆய்வு நோக்கில் இரண்டு ஆத்திசூடிகளையும் அணுகும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இரண்டு ஆத்திசூடிகளையும் மேலேழுந்தவாரியாகப் பார்த்தபொழுது சில இடங்களில் பாரதி ஔவையுடன் நேரடியாகவே முரண்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

"ஆறுவது சினம்" என்று ஔவை சொல்கிறாள்; "ரௌத்திரம் பழகு" என்று பாரதி சொல்கிறான். தேசத்தோடு  ஒட்டி வாழ் என்றும் "நாடு ஒப்பன செய்" என்றும் சொல்கிறாள் ஔவை; "புதியன விரும்பு" என்கிறான் பாரதி. "தையல் சொல் கேளேல்" என்று ஔவை சொன்னால் "தையலை உயர்வு செய்" என்று பாரதி சொல்கிறான். "தொன்மை மறவேல்" என்று சொல்கிறாள் தமிழ் மூதாட்டி; "தொன்மைக் கஞ்சேல்" என்கிறான் மகாகவி. "போர்த்தொழில் புரியேல்" என்று ஔவை சொன்னால் "போர்த் தொழில் பழகு" என்று முழங்குகிறான் பாரதி. "முனைமுகத்து நில்லேல்" என்று ஔவை சொல்கிறாள்; "முனையிலே முகத்து நில்" என்று மீசையை முறுக்குகிறான் பாரதி. "வல்லமை பேசேல்" என்று ஔவையும் "வெடிப்புறப் பேசு" என்று பாரதியும் சொல்கின்றனர்.

என் அறிவுக்கெட்டியவற்றை இங்கே கூறியிருக்கிறேன். இன்னும் எங்கெங்கு முரண்பாடுகள் - விவாதத்திற்குரிய விஷயங்கள் இருக்கின்றன என்பதை சற்று நுணுகிக் கற்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை கம்பன் கழகக் கூட்டத்தில் இன்னும் எவையெல்லாம் அறியக் கிடைக்குமோ? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment