Wednesday 24 June 2015

தலைக் கவசம் - தலைவலி

ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காப்பதில் தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால் இதனால் மட்டும் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்து விட முடியுமா என்ற சந்தேகமும் இயல்பாகவே நமக்கு எழுகிறது.

ஓட்டுனர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது, திரும்பும்போது சைகை காட்டுவது, திரும்பும் வாகனங்களுக்கு வழி விடுவது, பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது பொறுமை காப்பது போன்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் பெரும்பாலோர் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சாலையின் இடதுபுறமாகத்தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்று தெரியாதவன் கூட, காசு கொடுத்தால் கழுதைக்கும் லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரிகளின் பேராசையையும் பொறுப்பின்மையையும் பயன்படுத்தி ஓட்டுனர் உரிமம் வாங்கி, அரசாங்க அங்கீகாரத்துடன் வாகனம் ஓட்டும் நாட்டில், தலைக் கவசம் அணிவதால் ஒருவன் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்று இந்த அரசு கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

ஒளிவுமறைவாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, எந்தவிதக் கூச்சமுமின்றி, பெயிண்ட் அடிக்காவிட்டால் 5000; பிரேக் பிடிக்காவிட்டால் 10000 என்று எதற்கும் ஒரு விலையை நிர்ணயித்து தகுதிச் சான்று வழங்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளைக் கண்டுகொள்ளாமல், தலைக் கவசம் உயிரைக் காப்பாற்றும் என்று நமது அரசாங்கம் சொல்வதை எப்படி நம்புவது?

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும், பெண்களையும் கண்டுகொள்ளாமல், ஆவணங்கள் நடப்பில் இருந்தாலும், சோதனையின்போது காண்பிக்கத் தவறும் பொதுமக்களிடம் கூட ஐநூறும் ஆயிரமும் வாங்குவதும், விபத்து நடக்கும்போது தவறு யார் பக்கம் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பெரிய வாகனத்தின் மீது வழக்குப் பதிவு செய்வதுமான காவல்துறை இருக்கின்ற நாட்டில், தலைக் கவசம் உயிரைக் காப்பாற்றும் என்று அரசாங்கம் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது?

எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தின் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற இருவர், கட்டுப்பாடில்லாமல் வந்த வாகனம் மோதி சமீபத்தில் பலியானார்கள். எந்த இடர்ப்பாடும் இல்லாத, நேரான சாலையில் காரணமே இல்லாமல் கவனக் குறைவாலோ, திறமைக் குறைவாலோ, அலட்சியத்தாலோ விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்யாமல், அந்த இடத்தில் இரண்டு வேகத்தடைகளை அமைத்து அனைவருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்திய அரசு, தலைக் கவசம் அணியவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

வழிப்பறி போல சுங்கக் கட்டணம் வசூலித்து விட்டு, சாலையை சரிவரப் பராமரிக்காமல் தரமற்ற சாலைகளை மக்களைப் பயன்படுத்தச் செய்யும் அரசு, உயிரிழப்புக்கு தலைக் கவசம் அணியாததுதான் காரணம் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

சாதாரண வாகனங்கள் மட்டுமல்லாது, சாலையோர உணவகங்களில் இலவசச் சோற்றுக்காக வரும் அரசுப் பேருந்துகள் வரை பல வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் எதிர்த்திசையில் வருவதைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம், உயிரிழப்புக்குக் காரணம் தலைக் கவசம் அணியாததுதான் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?

தலைக் கவசம் அணியாதது சட்ட விரோதம் என்றால் சட்டத்தை மதிக்காமல் விபத்து ஏற்படுத்தி உயிரிழந்தவனுக்கு இழப்பீடு வழங்குவது சட்ட விரோதம் மட்டுமல்லாது தலைக் கவசம் அணியாததை ஊக்குவிக்கும் செயலும்தான். சட்டத்தை மீறியவனுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையான நீதி பரிபாலன முறை என்பது நமக்குப் புரியவில்லை.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், முதலமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 60000 யூனிட் ரத்தம் சேகரிக்கிறோம் என்று சொல்லி, லைசென்ஸ் பெறுவது, தகுதிச் சான்று புதுப்பிப்பது போன்ற வேலைகளுக்காக வந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ரத்தத்தை உறிஞ்சி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள்.

தரமும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத, எடைக்குப் போடும் தரத்திலுள்ள அரசுப் பேருந்துகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுவதும் பயணம் செய்கின்றனர். ஆனால் மாணவர் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயன்ற அரசாங்கம் கல்வி நிலைய வாகனங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. எல்லா வாகனங்களும் ஒரு அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு தகுதிச் சான்று புதுப்பிக்கும்போது, கல்வி நிலைய வாகனம் மட்டும் நான்கு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. ஒரு அதிகாரிக்குப் பதிலாக நான்கு அதிகாரிகள் சம்பாதிப்பதுதான் இதனால் கை மேல் கண்ட பலன்.

சரியான அளவில், தெளிவாகப் புரியும்படி பதிவு எண்ணை எழுதாத பல வாகனங்களை விட்டுவிட்டு, பதிவு எண் தெளிவாகத் தெரியும்படி எழுதியுள்ள IND நம்பர் பிளேட் பொருத்திய வாகன உரிமையாளர்களுக்கு ரூ. 100 அபராதம் விதித்தார்கள். நம்பர் பிளேட் தயாரித்து விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை வந்தது என்பதுவும், அங்கீகாரம் இல்லாத பொருளை விற்பனை செய்யத் தொடங்கும்போது தொந்தரவு வராமல் இருக்க அவர்கள் என்ன விலை கொடுத்தார்கள் என்பதுவும் யாருக்கும் தெரியாது.

தலைக் கவசம் கட்டாயம் என்ற நிலை வந்துவிட்டால் சாலையோரங்களிலும், ஆட்டோ ஸ்டோர்களிலும் கண்டபடி, தலைக் கவசம் விற்று சம்பாதிப்பார்கள். இரண்டு மூன்று மாதங்கள் தாறுமாறாக விற்றுத் தீர்த்த பின்னர், தலைக் கவசத்தின் மீதான கண்டிப்பு தளர்த்தப்படும் என்பதுதான் இன்று வரை பல முறை நாம் கண்ட அனுபவம். ஆகவே, இன்று தலைக் கவசத்தைக் கட்டாயப்படுத்தும் அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் நோக்கம் மக்கள் நலன் அல்ல என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை.

"ஓரஞ் செய்தி டாமே, - தருமத்
துறுதி கொன்றி டாமே,
சோரஞ் செய்தி டாமே, - பிறரைத்
துயரில் வீழ்த்தி டாமே,
ஊரை யாளு முறைமை - உலகில்
ஓர்பு றத்து மில்லை" என்ற பாரதியின் வரிகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.

No comments:

Post a Comment